சென்னை அருகில் உள்ள எண்ணூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.3.769 கோடி கடன் வழங்க மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய அனல்மின் கழகம் சார்பில் எண்ணூரில் புதியதாக மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வழங்குகிறது.
இது குறித்து அக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் 1,000 மெகாவாட் அதிகரிப்பதுடன், மாநிலத்தின் மின்சார அடிப்படை கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்படும். 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இத்திட்டத்தின் முதல் கட்டம் 2010-11ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மின் உற்பத்தி திட்டங்களை உருவாக்குதல், பரவலாக்குதல், மேம்படுத்துல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.