அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் அக்கட்சி தேசிய தலைவர் பிஸ்வாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக நடிகர் கார்த்திக் நியமிக்கப்பட்டார். நடிகர் கார்த்திக்கின் செயல்பாடுகள் சரியில்லை என கட்சி நிர்வாகிகள் பலர் மேலிடத்திற்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இது குறித்து விளக்கம் கேட்டு கார்த்திக்கிற்கு கட்சி மேலிடம் தாக்கீடு அனுப்பியது.
இந்நிலையில் மதுரையில் பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று கட்சியின் அகில இந்திய தலைவர் பிஸ்வாஸ் தலைமையில் நடந்தது. ஆனால் மாநில தலைவர் கார்த்திக் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் பிஸ்வாஸ் பேசுகையில், கார்த்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க தேவராஜன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தமிழ்நாட்டில் முகாமிட்டு அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துக்களை கேட்டறிந்து மே 27ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் மத்திய குழு கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.
அதன் அடிப்படையில் கார்த்திக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இறுதியாக அறிவிக்கப்படும். புதிதாக தற்காலிக குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளதால், மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டு உள்ளனர் என்றார் பிஸ்வாஸ்.