''விற்பனை வரி, ஆயத்தீர்வை, வாகன வரி உள்ளிட்ட துறைகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் அரசுக்கு ரூ.378 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது'' என்று தணிக்கைத் துறை அதிகாரி முருகையா கூறினார்.
இது பற்றி சென்னையில் தணிக்கை துறையின் அக்கவுண்ட் ஜெனரல் (வணிகம் மற்றும் வரவினங்கள் தணிக்கை) எஸ்.முருகையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் 2006-07ஆம் ஆண்டு செலவினங்களுக்கான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த 14-ந் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
சிவில், வருவாய், வர்த்தகம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. விற்பனை வரி, மாநில ஆயத் தீர்வை, நில வருவாய், நகர்ப்புற நில வரி, வாகனங்கள் மீதான வரி உள்ளிட்ட துறைகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் குறைவான தொகைக்கு வரி விதிப்பு, குறைவான வரி விதிப்பு, கூடுதல் செலவினம், திட்டங்களை முடிப்பதில் காலதாமதம் ஆகியவை காரணமாக மாநில அரசுக்கு ரூ.377 கோடியே 99 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திட்ட அறிக்கையில் இல்லாத பணிகளுக்காக ரூ.2 கோடியே 47 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. அணைக்கட்டு மற்றும் கால்வாய்களை கூடுதல் கொள்ளவுடன் வடிவமைத்ததால் ரூ.5 கோடியே 77 லட்சம் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் தொடர்ந்து வேலைக்கு வராமல் இருப்பது, செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் உள்ள குறைபாடுகள் போன்றவை மருத்துவ கல்வியின் தரத்தைப் பாதிக்கின்றன.
கல்வி உதவித் தொகை, பல்வேறு ஊக்கத் தொகைகள் பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்படவில்லை. அவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கும் நிதியை சரியாக மதிப்பீடு செய்யவில்லை. பழங்குடி மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவர்களின் கல்வித்தரம் பாதித்துள்ளது என்று தணிக்கைத் துறை அதிகாரி முருகையா கூறினார்.