'எனது ராஜினாமா பற்றி கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை' என்று பூங்கோதை அறிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும், தமிழினத்தையும் பாதுகாக்கும் ஒரே தலைவர், முதலமைச்சர் கருணாநிதிதான். என் தந்தை ஆலடி அருணா இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், என்னுடைய நிரந்தர தலைவர் முதலமைச்சர் கருணாநிதிதான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருடைய அரசியல் ஆதாயத்திற்காக மறைந்த என் தந்தையை பற்றிக் கூறுவது அரசியல் நாகரீகமாகாது. என் தந்தை அவருடைய மரணத்திற்கு முன்பு தன் தலைவர் முதலமைச்சர் கருணாநிதியை விட்டு பிரிந்து வாடியதும், வருத்தம் அடைந்ததும், மீண்டும் அவருடனும், தி.மு.க.வுடனும் இணைந்து கொள்ள விரும்பியதும் எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் அந்த உண்மையும், வலியும் புரியும்.
எல்லா தருணங்களிலும் என்றென்றும் தி.மு.க.வின் தலைவரும் எங்கள் முதலமைச்சருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே நான் பெருமையாக கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய அவருக்கு என்னால் சிறு அளவில்கூட எவ்வித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ராஜினாமா கடிதத்தை அளித்தேன். என் தலைவருக்காக தி.மு.க.வின் கடைசித் தொண்டராக இருந்து பணியாற்றுவதையே பெருமையாகக் கருதுபவள் நான்.
எனவே, இந்த விடயம் குறித்து கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்தவித யோக்கியதையோ, அருகதையோ இல்லை. ஜெயலலிதா மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டன என்று இந்த நாட்டிற்கே தெரியும் என்று பூங்கோதை கூறியுள்ளார்.