பழிக்குபழியாக ஜெயங்கொண்டம் அருகே இன்று ஐந்து பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மீமிசல் அருகே உள்ளது வங்குடி கிராமம். இங்குள்ள காளியம்மன் கோயிலில் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக தர்மலிங்கம் என்பவருக்கும் தெய்சிங் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி 6 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இதனால் மேலும் பகை உணர்வு அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து பழிக்கு பழியாக இன்று காலை வங்குடிக்கு வந்த தெய்சிங்கின் கோஷ்டியினர் அங்கு நின்று கொண்டிருந்த காசிநாதன் (60), தர்மலிங்கம் (35), மகாலிங்கம் (25), பிரபு (25), சுரேஷ் (25) ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.
இதனை தடுத்த காசிநாதன் மனைவி ஜானகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிர் தப்பிக்க ஓடிய அவர்களை கும்பல் விரட்டிச் சென்று வெட்டியது. இதில் 5 பேரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அங்கிருந்து கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து காவல்துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.