தமிழகத்தில் சிறந்த முறையில் நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரவேற்றார். அப்போது, தமிழகத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
தமிழகத்தில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னையில் 18 பெருந்திட்டங்கள் ரூ.1362.81 கோடி
மதிப்பீட்டிலும், மதுரையில் 7 திட்டங்கள் ரூ.637.10 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூரில் 3 திட்டங்கள் ரூ.587.37 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 திட்டங்கள் ரூ.2587.29 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கும், மீஞ்சூரிலிருந்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காகவும், செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது பற்றியும் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.