Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சில நேர‌த்‌தி‌ல் உ‌ண்மையு‌ம் கச‌‌க்க‌த்தா‌ன் செ‌ய்யு‌ம்: ராமதாஸ்!

‌சில நேர‌த்‌தி‌ல் உ‌ண்மையு‌ம் கச‌‌க்க‌த்தா‌ன் செ‌ய்யு‌ம்: ராமதாஸ்!
, வெள்ளி, 16 மே 2008 (10:24 IST)
''விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையும் கசக்கத்தான் செய்யும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், த‌மிழக அரசு மீது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 61 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். ஆனால், அவரது கட்சி, வள்ளுவரின் வாக்கிற்கேற்ப இடித்துச் சொல்லுகின்ற கடமையைத் திறம்பட ஆற்றுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

அதே நேரத்தில், குற்றச்சாட்டாக அல்லாமல் அரசுக்கு நல்வழி காட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறவர்களைப் பார்த்து, 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்தியிருக்கிறார்.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் கூட இரு‌ந்தே குழி பறிக்கும் வேலை என்பது நான் இதுவரையில் அறிந்திராத கலை, நான் தெரிந்திராத கலை. நான் கற்றுக் கொள்ளாத கலை, இனியும் கற்றுக் கொள்ள விரும்பாத கலை.

உங்களுடைய கருத்துக்களை கேட்க மாட்டோம். அதற்கான அவசியமும் இல்லை. நாங்கள் எதையும் செய்வோம். நீங்கள் எதையும் தட்டிக் கேட்கக் கூடாது. ஆலோசனை என்ற முறையில் கூட கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் எங்களது துணைக் கட்சிகள். எங்கள் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நிற்க வேண்டுமே தவிர, கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது.

அதுதான் தோழமைக்கு இலக்கணம். தட்டி கேட்டால், தவறுகளைச் சுட்டிக் காட்டினால், கருத்துக்களை தெரிவித்தால், தவறைக் கூட தவறு என்று சுட்டிக் காட்டினால் அதனை நாங்கள் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். இதையும் நீங்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள நாங்களும் தயாரில்லை. மக்களும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கடந்த ஆட்சியின்போது உயர்கல்வித்துறையின் குறைகள் அல்லது குளறுபடிகள் என்று நம் எல்லோராலும் சொல்லப்பட்டவை அனைத்தும் இந்த ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டன என்று சொல்ல முடியுமா?

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், இந்தக் குளறுபடிகளையெல்லாம் சரி செய்யுங்கள் என்று சொன்னால் அது, ``கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை'' என்று பழி சுமத்தினால் அதனை உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? உலகம் கிடக்கட்டும், அய்யன் வள்ளுவர் ஏற்றுக்கொள்வாரா? "நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண், மேற்சென்று இடித்தற் பொருட்டு''- நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று. நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.

விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையும் கசக்கத்தான் செய்யும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil