சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.30 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது என்று நிதி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற நிதித் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து நிதியமைச்சர் அன்பழகன் கூறுகையில், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது ரூ.2,000 சம்பளம், ஈட்டுப்படி, தொகுதிப் படி, தொகுப்புப் படி, தொலைபேசி, வாகனம், தபால் ஆகிய படிகளுமாக சேர்த்து மாதத்துக்கு ரூ. 25,000 வழங்கப்படுகிறது.
உறுப்பினர்களின் வேண்டுகோள்படி, சம்பளத்தில் ரூ.1000ம் , படிகளில் ரூ.4,000ம் சேர்த்து மாதத்துக்கு ரூ.30,000 வழங்கப்படும். இந்த உயர்வு, 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக தற்போது ரூ.7,000ம் வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.8,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. முன்னாள் உறுப்பினர்கள் இறந்தால், அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 3,500-லிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இவையும், 2008 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.