''தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நான்கைந்து பேர் கூட்டணி சேர்ந்து நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்பவரின் தோழமைதான் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் வேம்பாய் கசக்கிறது.
தொங்கலில் சேது சமுத்திரத் திட்டம்: பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் வலியுறுத்தப்பட்ட, தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது.
இன்னும் எத்தனைக் காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாள்கள் ஓடிப் போய் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது.
தேசத்தைக் காப்பதா? தேகத்தை துளைத்துக் கூறுபோடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதா என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
தன்னலம் இல்லாதவர்களும், தாய்நாட்டிற்காக உயிரையும் துறப்பவர்களும் தான் என்னுடன் இருப்பவர்கள் என்ற பெருமிதம் வாய்க்கும் வரையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.