ஜெய்ப்பூரில் நடந்த தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து, ஒழித்துக் கட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நேற்றிரவு 7.40 மணிக்கு ஏழு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு கொடிய நிகழ்வில் 60 அப்பாவி மக்கள் பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவிரவாதிகளின் சதிச்செயலால் இந்த கோரச்சம்பவம் நடந்தது என்றும், அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணமான கொடியவர்களின் ஈனமற்ற கோழைத்தனத்திற்கு எனது கடும் கண்டனத்தையும், இந்நிகழ்வில் பலியானோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமுற்றோர் விரைவில் நலம் பெற எனது வேண்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநியாயமாய் பறிபோன மனித உயிர்களை எந்த சக்தியால் நாம் ஈடுகட்ட முடியும்? எனவே ஈவு, இரக்கமற்ற இதுபோன்ற தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து, ஒழித்துக் கட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு அமைதிப் பூங்காவாய் இருந்து வரும் நிலையில் அதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது என்றாலும், படுபாதகச் செயலில் மிருகத்தனமாக ஈடுபடும் கொடியவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில் அரசுக்கும், காவல் துறைக்கும் உற்ற உதவியாக எப்போதும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று பெரிதும் வேண்டுகிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.