''தலித் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
திருச்சியில் அவர் செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில், பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை; நடவடிக்கைகளில் இருந்து தவறியிருக்கிறது. சந்தைச் சக்திகளின் முன் மத்திய அரசு செய்வதறியாது தவித்து, கைகட்டி நிற்கிறது. விலைவாசி தானாகக் குறையும் என்றும் நம்புகிறது. உணவு உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், விலைவாசி குறையவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தவிர, விலைவாசியைக் குறைக்க முடியாது.
கச்சத்தீவு உடன்பாட்டில், இந்திய மீனவர்கள் அந்தத் தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், புனித அந்தோனியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்றெல்லாம் உள்ளது. ஆனால், மீன் பிடிக்கலாமா? என்பது குறித்த விளக்கங்கள் தெளிவாக இல்லை. எனவே, அந்த உடன்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த, ஏற்கெனவே 5 வழித்தடங்களை ஆய்வு செய்து இறுதியாகத் தற்போது 6-வது வழித்தடத்தை அரசு தேர்வு செய்துள்ளது. இப்போது 7-வது வழித்தடத்தைத் தேடும் ஆலோசனையானது, இத் திட்டத்தை மேலும் காலதாமதப்படுத்தும்.
புத்த மதம், சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் போது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை? தலித் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று ராஜா கூறினார்.