ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள் அதிகமாக வசித்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் எதிரொலியாக காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக தண்ணீர் தேடி வனக்குட்டைக்கு வந்துகொண்டுள்ளது.மாலை நேரங்களில் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு இரவு முழுவதும் இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209 ன் ஓரத்தில் வந்து நிற்றுகொள்கிறது.பின்னர் சாலையின் தென்பகுதியில் வந்து அங்குள்ள விவசாய பயிர்களை பதம்பார்க்க தொடங்கிவிடுகிறது. பின் காலை ஐந்து மணி முதல் எட்டு மணிவரை சத்தியமங்கலம் பண்ணாரி வழியில் புதுகுய்யனூர் பிரிவில் இருந்து பண்ணாரி கோயிலுக்கு சற்று முன்பு வரை உள்ள வனப்பகுதியில் சாதாரணமாக யானை கூட்டங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை தெற்குபக்கத்தில் இருந்து வடக்கு பக்கத்திற்கு செல்கிறது.
இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படுகிறது. நாள்தோறும் இந்த வழியாக செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் இருபக்கமும் பார்த்து சென்றுவிடுகின்றனர்.
ஆனால் புதியதாக வருபவர்கள் இந்த யானை கூட்டத்திற்கு அருகில் சிக்கி கொள்கின்றனர். உடனே யானை கூட்டங்கள் அந்த வாகனங்களை விரட்ட தொடங்கிவிடுகிறது. இந்த வழியாக வனவிலங்குகள் சாலையை கடப்பது குறித்து எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும் வாகனத்தில் வருபவர்கள் அதை கவனிப்பதில்லை.
இது குறித்து வனத்துறை அதிகாரி இராமசுப்பிரமணியம் கூறுகையில், ''வனவிலங்ககுள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் செல்பவர்கள் நின்று கொண்டால் போதும். அது யாருக்கும் சொந்தரவு செய்யாமல் சாதாரணமாக சாலையை கடந்து சென்றுவிடும். நாம் அதை துன்புறுத்தினால் மட்டுமே நம்மை வனவிலங்குகள் தொந்தரவு செய்யும்'' என்றார்.