லஞ்ச பெற்ற தனது உறவினரை காப்பாற்ற முயன்றதாக குற்றம்சாற்றப்பட்ட சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் அமைச்சர் பூங்கோதை ஈடுபட்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசி யில் பேசிய விவரங்களை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டார்.
இது பற்றி சட்டப் பேரைவயில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது, அமைச்சர் பொறுப்பை ஏற்கும் ஒருவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி தாம் ஏற்றுக் கொண்ட நன்னடத்தை உறுதிமொழியை மீறி செயல்படக் கூடாது.
ஒழுங்கு நடவடிக்கை அல்லது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை விட சம்பந்தப்பட்ட அமைச்சரே இதற்கு பரிகாரம் தேடுவது சரியாக இருக்கும். இந்த பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அறிய விரும்புகிறேன் என்றார் பன்னீர்செல்வம்.
இதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளிக்கையில், ஏற்கனவே தலைமை செயலாளர், அதிகாரி ஒருவர் பேசியது தொடர்பான விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அந்த பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே இடையில் இப்படியொரு செய்தி வந்திருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதற்கிடையே அம்மையார் பூங்கோதை ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அவர் செயல்பட்டது சட்ட விரோதமான ஒன்றுதான். அவர்களின் பேச்சு குறித்து இப்போது சொன்னால் விசாரணைக்கு முன்பே கூறியதாக ஆகி விடும்.
இந்த விடயத்தை பொறுத்தவரை லஞ்சம் வாங்கிய தமது சொந்தக்காரரை பாதுகாக்கும் முயற்சியாகும். இது உண்மை யிலேயே நான் வெட்கப்படும் ஒன்று. அதை நிச்சயம் ஏற்கவில்லை. அமைச்சர் பூங்கோதை தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நான் இந்த ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். இது குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது இப்போதுள்ள குழுவே விசாரிக்கட்டுமா? என்பது குறித்து யோசிக்கிறோம்.
நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டோம்; அதுவும் லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது குற்றம் என்பதை உணருகிறோம். இது குறித்து அடுத்தடுத்து எடுக்கும் அரசின் நடவடிக்கைகள் இந்த அவைக்கு தெரியப்படுத்தப்படும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.