''நீதிபதி ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது'' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனியார் பொறியியல் கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்டு உள்ள நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆணையத்தின் அறிக்கையை ஒருவாரம் அல்லது 10 நாட்களில் எதிர்பார்க்கிறோம். அது வந்ததும், பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
நீதிபதி ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த ஆண்டு அதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடரும்.
அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று சோதனை மேற்கொள்ளப்படும். அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்களில் தற்போது அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அரசு தரப்பில் 6 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதனால் 1,440 கல்வி இடங்கள் அதிகமாகி உள்ளது. கல்லூரி இடங்கள் அதிகமாவது மட்டுமல்ல, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மார்க்கும் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.