தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தி மோதலை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையிலான சட்ட திருத்த மசோதா உள்பட எட்டு மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவோர் மீதும், அதை தூண்டுவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரைவயில் நேற்று அறிவித்தார். இதற்கான சட்ட மசோதா விரைவில் தாக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்ட திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.
சாமி சிலைகள் மற்றும் தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவோர் அவற்றை விகாரப்படுத்தி, இழிவுபடுத்துவோர், இதனை தூண்டி விட்டு சாதி, இனம், சமயம் ஆகியவற்றுக்கிடையே பகைமை உணர்ச்சியை விதைத்து சட்டம், ஒழுங்கை குலைப்பவர்களை குண்டர்கள் என்ற வலைக்குள் கொண்டு வருவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தால் சாமி சிலைகள், தலைவர் சிலைகளை சேதப்படுத்துவோர், இழிவுபடுத்துவோர், பகைமை உணர்ச்சியை தூண்டி மோதலுக்கு வித்திடுவோர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
இந்த மசோதா மட்டுமல்லாது, 8 மசோதாக்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.