''அனைவரும் தோழமையோடு இருந்தோம். சிறந்த முறையில் பழகினோம் என்ற திருப்தியோடு மறையவே விரும்புகிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க அரசு பொறுப்பேற்று 3ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி அவைத் தலைவர், தோழமைக் கட்சித் தலைவர்கள் அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்து தெரிவித்து பேசினர்.
பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இங்கே பேசிய அனைவரும் நான் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று சாபம் கொடுத்தனர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரிய வில்லை. இயற்கை எந்த அளவிற்கு இடம் தருகிறதோ அந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறேன்.
இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
அதிகாலையில் எழுந்து சிறந்த முறையில் உழைத்தால் நீண்ட முறையில் உயிர் வாழலாம் என்பதற்கு நானே உதாரணம். இதை வெறும் ஜம்பத்திற்காக சொல்லவில்லை. இளைஞர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் கூறுகிறேன்.
இங்குள்ள அனைவரும் தோழமையோடு இருந்தோம். சிறந்த முறையில் பழகினோம் என்ற திருப்தியோடு மறையவே விரும்புகிறேன் என்பது என்னுடைய ஆசை. தோழமைக் கட்சிகள் மாத்திரமல்ல, கூட்டு சேராத, ஒரு காலத்தில் கூட்டு சேர்ந்திருந்த இன்றைய எதிர்க்கட்சி உட்பட அனைவரும் ஒரே உணர்ச்சி யோடு பழக வேண்டும். பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். பணியை நேசிக்க வேண்டும். மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.
இயற்கை பிரித்து விட்டால்...
ஒருவேளை நீங்கள் விரும்புகிற நாள் வரை வாழ முடியாவிட்டால், இயற்கை உங்களை விட்டு பிரித்து விட்டால் ஒரு பெரியவனின் வார்த்தையாக இல்லாமல் போனாலும் ஒரு சிறியவன் விடுத்த கெஞ்சலாகவாவது இவற்றை பின்பற்றி தமிழ்நாட்டு மக்களை முன்னேற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.