''ஒரு துளியும் குறையாமல் எவ்வித குறைபாடும் இல்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ளன'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் கருணாநிதி அளித்த பதிலுரையில், ஜெயலலிதா "இஸட் பிளஸ்' பாதுகாப்புக்குத் தகுதியுள்ளவர் தான். அதை மறுக்கவில்லை. அதே சமயம் மத்திய அரசு ஒவ்வொரு வகையான பாதுகாப்பு நிலைக்கும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்று விரிவாக ஆணை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு துளியும் குறையாமல் எவ்வித குறைபாடும் இல்லாமல் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில், தன் வீட்டைச் சுற்றி சி.சி. டிவி. , பயணம் செய்யும்போது "ஜாமர்' ஆம்புலன்ஸ் வேண்டும் எனக் கோரியுள்ளார். "இஸட் பிளஸ்' பாதுகாப்பைப் பெறுவோருக்கு மேற்கண்ட மூன்றையும் வழங்கும் படி மத்திய அரசின் ஆணையில் இல்லை.
அரசின் சார்பில் வழங்கப்படும் வாகனங்கள் டீசல் வண்டிகளாக இருக்கக் கூடாது, பெட்ரோல் வாகனங்களாக இருக்க வேண்டும். குண்டு துளைக்காத கார் வேண்டும் என்று கேட்டார். முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கார் போல் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் பயன்படுத்துவதில்லை.
தனது பாதுகாப்புக்காக எந்தெந்த அதிகாரிகள் வேண்டும் என்றாரோ அவர்களை அனுப்பினோம். மேற்பார்வையிட ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட மூவர் குழு கோரியுள்ளார். இவையெல்லாம் மத்திய அரசின் ஆணையில் இல்லாததால், அரசின் பதிலை நீதி மன்றத்தில் கூறியுள்ளோம். நீதிமன்றம் கட்டளையிட்டால், அதற்கேற்ப உரிய பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் இல்லை என்று முதல்வர் கூறினார்.