தமிழகத்தில் காலியாக உள்ள 201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர், நீதிமன்றங்களில் அதிகமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கடந்த ஆட்சியில் வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் நீதிபதிகள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. 81 நீதிபதிகளை நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதற்கு அனுமதி தரப்பட்டது.
பிறகு 181 இடங்கள் காலியாக உள்ளன என்று கேட்டார்கள், அதற்கும் அரசு அனுமதி தந்தது. 201 நீதிபதிகளை நியமனம் செய்ய அரசின் அனுமதி பெறாமல் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதனால் அது நின்றுபோனது. இப்போது 201 நீதிபதிகள் நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.