''இனி ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் காலி இடங்களை மதிப்பீடு செய்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஆணை வெளியிடும் அதிகாரத்தை காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கிட முடிவு செய்துள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மாணியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில், தற்போதுள்ள நடை முறைப்படி, இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பணி நியமனங்களுக்கு அரசு ஆணை மூலம் அவ்வப்போது அனுமதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடும் வகையில் மூன்றாவது காவல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரையையும் ஏற்று, இனி ஒவ்வொரு ஆண்டும் காலி இடங்களை மதிப்பீடு செய்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஆணை வெளியிடும் அதிகாரத்தை காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கிட முடிவு செய்துள்ளது.
காவல்துறை தலைமை இயக்குநர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்திற்குக் காலிப் பணியிடங்களை அறிவிப்பதற்கும், அவ்வாரியம் பணியிடங்களை நிரப்புவதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கும் கால அட்டவணை ஒன்று அர சால் வெளியிடப்படும். இந்த மாற்றம், 2009-2010-ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
2009-2010ம் ஆண்டிலிருந்து காவல் துறைக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது சிறப்பு காவல் படை மற்றும் பிற காவலர்களுக்கு தனித் தனியாக தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படும்.
திருச்சியில் காவல் பயிற்சி பள்ளி!
தற்போது மாநிலத்தில் காவல் பயிற்சிப் பள்ளிகள் வேலூர், கோயம்புத்தூர் மற்றும் பேரூரணியில் இயங்கி வருகின்றன. மூன்றாவது காவல் ஆணையம், மேலும் 3 காவல் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று முதல் கட்டமாக 2008- 2009ம் ஆண்டில் திருச்சியில் ஒரு புதிய காவல் பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும்.
காவல்துறை கருணைக் கொடைத்திட்டத்திற்கான அரசின் பங்கு ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.ஒரு கோடியாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,452 காவல் நிலையங்களில் சொந்தக் கட்டடம் இல்லாத 273 நிலையங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.