விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவற்றை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் வலியுறுத்தி உள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று டி.சுதர்சனம் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சில கட்சிகளும், அமைப்புகளும் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அத்தகைய அமைப்புகளையும், கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.
மனிதநேயத்தோடும், அறநெறியோடும் காவல்துறை செயல்பட வேண்டும். காவிஉடை தெய்வபக்திக்கு அடையாளம். கதர் உடை தேசபக்திக்கு அடையாளம். அதேபோல காக்கி உடை கடமைக்கு அடையாளம். காவல்துறை தவறு செய்தால் அது முதலமைச்சரை தான் பாதிக்கும். எனவே இந்த துறை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
சென்னை நகரில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் அதிகம். இதனால் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு சென்னை மாநகர போக்குவரத்து ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடங்கிய இந்த குழு வழங்கும் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல்பட்டால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இயற்கைச்செல்வம் அழிகிறது. இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சுதர்சனம் வலியுறுத்தினார்.