விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர 15 நாட்களுக்குள் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசை அகற்ற நாடுதழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரிசி, உப்பு, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி கட்டுமானப் பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டு பணவீக்க விகிதம் ஒட்டு மொத்த விலையின் அடிப்படை யில் கணக்கிடப்படுவதால் 7.61 விழுக்காடாக உள்ளது.
இடைத் தரகர்கள், சில்லறை வியாபாரிகளின் லாபத்தையும் கணக்கிட்டால் பணவீக்க விகிதம் 30 விழுக்காடாக இருக்கும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தமிழகத்தில் உள்ளாட்சிகள் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை மற்றும் போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றின் விலையும் விண்ணை எட்டும் அளவில் உயர்ந் துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் வீட்டு வாடகை கடுமையாக அதிகரித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் ப.சிதம்ரம், இந்த விலைவாசி உயர்வு பற்றி கவலைப்பட வேண்டிய தில்லை என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வுக்கு அமெரிக்க கொள்கைகள் காரணம் என்று முதலில் கூறிய சிதம்பரம் பின்னர் சர்வதேச அளவில் விலைவாசி உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றார்.
இறக்குமதியாகும் பொருட்களின் விலையை நிதியமைச்சரோ பிரதமரோ குறைக்க முடியாது என்றார். பின்னர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால் இப்போது பணவீக்கம் உயர்வு குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகிறார்.
விலைவாசி உயர்வு பிரச்சனையில் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங்கும் மவுனம் சாதித்து வருகிறார். நடுத்தர வர்க்க இந்தியர்கள் அதிக அளவில் உணவு உட்கொள்ளத் தொடங்கியதன் விளைவாகவே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியிருப்பதை வாபஸ் பெற வேண்டும் என்று நிதியமைச்சரோ பிரதமரோ நிர்ப்பந்திக்கவில்லை.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு உடனடியாக தடை!
விலைவாசி உயர்வுக்கு ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் பதுக்கல் ஆகியவையே முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்திற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும். உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் மற்றும் சுங்க வரிகள் நீக்கப்பட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர 15 நாட்களுக்குள் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மத்தியில் ஆளும் இந்த அரசுதான் மிகவும் பலவீனமான மற்றும் ஊழல் அரசு என்ற கருத்து உறுதி செய்யப்படும். இந்த அரசை அகற்ற நாடு தழுவிய அளவில் அ.இ.அ.தி.மு.க போராட்டம் நடத்தும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.