ஊருக்கு திரும்பாமல் உத்தபுரம் மக்கள் 5வது நாளாக மலைப் பகுதியில் வசித்து வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே இருந்த தடுப்பு சுவர் கடந்த 6ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் உத்தபுரம் அருகே உள்ள தாழையூத்து மலைப்பகுதிக்கு சென்று குடியேறினர்.
அவர்களை ஊருக்குள் திரும்ப வரும் படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஊர் மக்கள் நிராகரித்து விட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவகர், ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ஐந்து நிபந்தனைகளை விதித்தனர். இதனை ஏற்க மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து உத்தபுரம் மக்கள் 5-வது நாளாக இன்றும் மலைப்பகுதியில் வசித்து வருகிறார்கள். குழந்தைகளும், பெண்களும் வெயில், மழை, பனியில் படுத்து தூங்குவதால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜமுனா (12), பிரகாஷ் (10) ஆகியோர் அம்மை நோய் தாக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஊருக்குள் திரும்ப மாட்டோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.