ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது!
, சனி, 10 மே 2008 (14:01 IST)
உலக புகழ் பெற்ற ஊட்டி ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 3600 வகையான ரோஜா பூக்கள் பல்வேறு வண்ணங்களில் அழகாக கட்சி அளிக்கின்றன.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் கோடை விழா நேற்று தொடங்கியது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான ரோஜா வகைகள் அணி வகுக்கும் சர்வதேச ரோஜா கண்காட்சி நடைபெறும்.இந்த ஆண்டுக்கான 7-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. இக்கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கண்காட்சியில் 3,600 வகையான ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களில் அழகாக காட்சி அளிக்கின்றன. கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் கருப்பு, பச்சை, நீலம், இருவண்ண ரோஜாக்கள் அழகாக அணி வகுக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவிலேயே 3,600 ரோஜா ரகங்களை கொண்ட ஒரே ரோஜா பூங்கா இதுதான். கண்காட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை கண்டு ரசிக்க பெரியவர்களுக்கு ரூ. 10ம், சிறியவர்களுக்கு ரூ.5ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.