''காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று தாக்கல் செய்த தமிழ்நாடு காவல் துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் இருப்பதாவது:
தமிழ்நாடு காவல்துறை ஒரு சிறந்த காவல் துறை என்ற தனிச் சிறப்பை பெற்றுள்ளது. காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளால் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர், விவசாயிகள் பிரச்சனை ஏதுமின்றி பொது அமைதி காக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தலைதூக்கி உள்ள போதிலும், தமிழகத்தில் காவல்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக வன்முறை செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன. அருகே உள்ள மாநிலங்களில் இருந்து தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயன்ற போது உடனுக்குடன் அவை தடுத்து நிறுத்தப்பட்டன.
2007ஆம் ஆண்டில் மாவோயிச குழுவை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தேசிய பாதுகாப்பு சட் டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வரும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கை காரணமாக 48 இலங்கை தீவிரவாதிகள் உள்பட 139 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடத்தல் நடவடிக்கைகளும், தீவிரவாத ஊடுருவலும் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும் பாதுகாப்புக்கும், அமைதியான சூழலுக்கும், அச்சுறுத்தலாக விளங்க கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.