''காவல்துறையினருக்கு 8 மணி பணி வழங்க வேண்டும்'' என்று என்று பா.ம.க தலைவர் கோ.க.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ம.க தலைவர் கோ.க.மணி பேசுகையில், மாநிலத்தையும், மக்களையும், மக்களுக்கு பயனளிக்கும் நிர்வாகத்தையும் பாதுகாக்கும் அரணாக காவல்துறை உள்ளது. எனவே அவர்கள் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் பணியாற்ற வேண்டும். கடமை தவறிய காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கூலிப்படைகள் வைத்து கொலைகள் செய்தல் போன்ற கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகளை தண்டிப்பதோடு, இதன் பின்னணியில் இருந்து தூண்டி விடுபவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து அவர்களையும் தண்டிக்க வேண்டும். காவல்துறை ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படவேண்டும்.
குற்றவாளிகள் மீது புகார் செய்யப்படாமல் குற்றமற்றவர்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். காவல்துறையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாக ஒரு கருத்து உள்ளததால் அவர்களுக்கு மனித உரிமை குறித்த பயிற்சி வழங்க வேண்டும்.
மேலும் போலீசாருக்கு 8 மணி நேர பணி என்பதை வழங்க வேண்டும். அவர்களுக்கு பதவி உயர்வு தாமதமற்று வழங்க வேண்டும் என்று கோ.க.மணி கூறினார்.