இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் வேணுகோபாலின் பதவி நீக்கம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனராக இருந்த மருத்துவர் வேணுகோபாலின் பதவி நீக்கம் தொடர்பாக இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திருத்தம் செல்லாது என்று இரு நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் மன்றங்கள் தான் சட்டங்களை இயற்றும் உரிமை படைத்திருக்கின்றன.
அத்தகைய உரிமை படைத்த மக்கள் மன்றங்கள் நிறைவேற்றுகின்ற சட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது இது முதல் முறையல்ல. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் இறுதியானதல்ல என்பதை பார்த்து வந்திருக்கிறோம். மேல்முறையீட்டில் தீர்ப்புகள் திருத்தப்பட்டிருக்கின்றன அல்லது மக்கள் மன்றங்களால், தேவையான திருத்தங்களோடு மீண்டும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எனவே இந்த தீர்ப்பும் திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜனநாயகத்திலும், சமூக நீதியிலும் அக்கறை கொண்டுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இதுபற்றி சிந்தித்து இத்தகைய தடைக் கற்களை எல்லாம் சமூகநீதிப் பயணத்தின் படிக்கற்களாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும். அதற்கான அவசியமும், அவசரமும் முன் எப்போதையும் விட இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.