''அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்'' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கோவிந்தசாமி கேட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், அவினாசி- அத்திக்கடவு திட்டம் மிக முக்கியமான திட்டம் என்பதால் இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பும் முதலமைச்சர், இதற்குரிய வழியை தேட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பிறகு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனையில் குடிநீருக்காக தண்ணீர் எடுப்பதற்கே கர்நாடக மாநிலத் தலைவர்கள் தகராறு செய்கிறார்கள்.
இந்த அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு மிகைநீரை தான் எடுக்கப்போகிறோம் என்றாலும் கூட நிச்சயம் அந்த திட்டத்தை இப்போது தொடங்கினால் வழக்கு வரும். இத்திட்டத்தை நிறைவேற்ற கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். நேரங்காலம் பார்த்து இந்த திட்டத்திற்கு நிச்சயம் அடிக்கல் நாட்டப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.