சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஏ.பி.ஷா. மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். பின்னர் இவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2005 ஆண்டு நியமிக்கப்பட்டார். தற்போது இவர் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
வரும் 21ஆம் தேதிக்குள் இந்த பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவருக்கு வழியனுப்பு விழா நடத்தப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான உத்தரவை வரும் 13ஆம் தேதிக்கு பிறகு குடியரசு தலைவர் பிறப்பிப்பார். இதைத் தொடர்ந்து ஏ.கே.கங்குலி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.