உசிலம்பட்டி அருகே சர்ச்சைக்குரிய தடுப்பு சுவரை காவல்துறையினரின் பாதுகாப்போடு இன்று இடிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலால் ஊருக்கு நடுவே 12 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஊரில் இருக்கும் ஆதிதிராவிடர்களை தனியாக பிரிக்கும் நோக்கத்தில் இந்த சுவர் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த சுவரை இடித்து தள்ளுவோம் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்திருந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அந்த சுவரை 7ஆம் தேதி (நாளை) நேரில் வந்து பார்வையிட இருப்பதாகவும் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி ராமச்சந்திரனிடம் உத்தபுரம் கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று கோரி நேற்று மனு கொடுத்தனர். பின்னர் 302 குடும்ப அட்டைகளை வருவாய் அதிகாரியிடம் கொடுத்தனர். ஆனால் அதை வாங்க அவர் மறுத்ததால் அவரது மேஜையில் வைத்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் 12 அடி உயரம், 600 மீட்டர் நீளம் கொண்ட சர்ச்சைக்குரிய தடுப்பு சுவர் புல்டோசர் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 1,300 காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அங்கு ஊர் மக்கள் அனைவரும் சென்று வரும் வகையில் பொதுவான பாதை அமைக்கப்பட்டது.
மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சுவர் எழுப்பப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சித் தலைவர் ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்த பொது மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.