மாணவர்கள் புத்தகப் பை சுமையை குறைக்கும் விதமாக சோதனை முறையில் சில பள்ளிகளில் இந்த ஆண்டில் சிறிய மடி கணினியில் (லேப்-டாப்) பாடபுத்தகங்கள் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் கருணாநிதிக்கு பதிலாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், மூன்று லட்சம் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளும் உருவாகி வருகின்றனர். இவர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் சென்னை மாவட்டத்தில் இரண்டு தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையங்களும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும், ஒரு தகவல் தொழில் நுட்பவியல் பயிற்சி மையமும் அமைக்கப்படும்.
இம்மையங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு செலவில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிப்படியாக தமிழ்நாடு பெரும்பரப்பு வலை அமைப்பு மூலமாக இணையதள வசதிகள் செய்து தரப்படும். இந்தியாவிலேயே இணைய தளத்தில் பள்ளி பாட புத்தகங்களை வெளியிட்ட முதல் மாநிலம் தமிழகமாகும்.
"கல்வி ஒரு சுமை அல்ல'' என்ற ஒரு புதிய திட்டம் பரிட்சார்த்த முறையில் இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்கள் சிறிய மடிகணினிகளில் பதிவு செய்யப்படும்.
பாடங்களை விளக்க மல்டிமீடியா முறையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும். இதனால் மாணவர்கள் பாடப் புத்தகங்களை வகுப்புக்கு சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இராது.
எளிதில் ஆங்கிலம் கற்க மென்பொருள்
அனிமேஷன் மற்றும் மல்டிமீடியாவை பயன்படுத்தி எளிதில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள சிறப்பு மென்பொருள் உருவாக்கப்படும். அயல்நாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உலகளவில் பெரும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.