தமிழகத்தில் இன்று ஆங்காங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாலும் பொதுவான வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். ஆயினும் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியசாக அளவிற்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் 42 டிகிரி வெப்பம் (110 பாரன்ஹீட் அளவிற்கு) பதிவாகியிருந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 3 செ.மீ. மழையும், வாடிப்பட்டியில் 2 செ.மீ. மழையும், திருச்சி மாவட்டம் மானாமதுரை2 செ.மீ. மழையும், கொடைக்கானல், சோழவந்தான் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அனல் காற்றால் மக்கள் அவதி!
அக்னி நட்சத்திரம் தொடங்கி 3-ம் நாளான இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இருந்தாலும், புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. அனல் காற்று வீசியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். முக்கிய சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன.