''சிறிலங்காவுக்கு நிதிஉதவி வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த நாட்டுக்கு இதுபோன்ற எத்தகைய உதவியையும் நேரடியாக மறைமுகமாகவோ செய்யக் கூடாது'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் வாங்க சிறிலங்காவின் பாதுகாப்புத் துறைக்கு இந்திய அரசு ரூ.400 கோடி கடன் வழங்க இருப்பதாக எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த செய்தியை இந்திய அரசும் மறுக்கவில்லை. ஆரம்பத்தில் நான் இந்த செய்தியை நம்பவில்லை. ஆனால் இது உண்மைதான் என்று நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை என்று தாங்கள் கடந்த மாதம் 21ஆம் தேதி அளித்த உறுதிமொழியை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழர்களை சிறிலங்கா அரசு இனப்படுகொலை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அப்படிப்பட்ட சிறிலங்கா அரசுக்கு, உறுதிமொழியையும் மீறி சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வழங்க இந்தியா நிதிஉதவி அளிக்க இருக்கிறது.
இந்த உதவியானது அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்கா அரசுக்கு உதவுவதாகவே அமையும். இலங்கையில் துயருற்று வரும் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்து பொருட்களை அனுப்பி வைக்க இதுவரை அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால் சிறிலங்கா அரசு தனது ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ள நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாகும்.
இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான தனது வெளியுறவு கொள்கையில் தவறுக்கு மேல் தவறாக செய்து வருவதாக நான் மிகுந்த வேதனையோடு குற்றம் சாற்றுகிறேன். தமிழர்களை தாக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு வேண்டுமென்றே இந்திய அரசு உதவுவதாகவும் நான் குற்றம் சாட்டுகிறேன்.
எனவே சிறிலங்காவுக்கு நிதிஉதவி வழங்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த நாட்டுக்கு இதுபோன்ற எத்தகைய உதவியையும் நேரடியாக மறைமுகமாகவோ செய்யக் கூடாது என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.