கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 67 வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யாத காரணத்தால் அவர்கள் அடுத்துவரும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணத்தைத் தாக்கல் செய்தனர்.
அவ்வாறு செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத அல்லது பொய்க்கணக்கு காட்டிய 67 வேட்பாளர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இவர்கள் அடுத்துவரும் 3 ஆண்டுகளில் வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாது. தொடர்புடைய 67 வேட்பாளர்களின் பெயர் விவரங்களை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகத் தலைமைத் தேர்தல் இன்று வெளியிட்டார்.
இந்த 67 வேட்பாளர்களும் போட்டியிட்ட தொகுதிகள் வருமாறு:
தர்மபுரி, பெண்ணாகரம், குன்னூர், ஊட்டி, புதுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சை, வலங்கைமான், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவாடனை, முதுகுளத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம்.
வேட்பாளர்களில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் -7, பா.ஜ.க. -6, தே.மு.தி.க.- 4, பி.எஸ்.பி.- 11, லோக் ஜனசக்தி, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய நீதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர், சுயேட்சை வேட்பாளர்கள் 34 பேர் ஆகியோர் தகுதி இழந்துள்ளனர்.