உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு தானியத் தட்டுப்பாட்டிற்கு அமெரிக்காவின் வேளாண் வியாபாரம்தான் காரணம் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம்சாற்றியுள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய மக்கள் அதிகளவு சாப்பிடுவதே உணவுத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வீண்பழி சுமத்தியிருக்கிறார்.
உலகம் முழுவதும் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வாழக்கூடிய மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒருவேளை சாப்பாட்டுடன் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் உலகளவில் விவசாயத்துறையில் அமெரிக்கா புகுத்தியுள்ள மாற்றங்களும், பருவநிலை மாற்றமும்தான் ஆகும். இயற்கைச் சூழல் கெடுவதற்கு அமெரிக்காவின் தொழில் கொள்கைகள்தான் காரணம்.
விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா திணிக்கிறது. விவசாயம் அந்தந்த பகுதி மண் சார்ந்தது என்ற நிலையில் அமெரிக்கா வேளாண் வியாபாரம் செய்கிறது.
நமது விவசாயிகளிடம் அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. நமக்கேற்ற விதைகள் மற்றும் உரங்களின் மூலம் ராமநாதபுரத்தில் ஒரு ஏக்கருக்கு 8 டன் நெல் விளைவித்துச் சாதனை படைத்தார்கள். ஆந்திராவில் ஒரே மாமரத்தில் 40 ஆயிரம் மாம்பலங்களை விளைய வைத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உலக நாடுகளின் மீது தான் திணித்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் சரிதானா என்று ஆய்வுசெய்து பார்க்க வேண்டும்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நாம் புதிய பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறோம். இதை மறு ஆய்வு செய்ய வேண்டும். பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது மக்களி பட்டினி இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.