தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்குச் சட்டப்படியான அதிகாரம் வழங்கிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அவ்வாணையத்தின் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், " 1989 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது முதல்வர் கருணாநிதி மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து ஒவ்வொருமுறை ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதும் உண்மையான, நேர்மையான அக்கறையோடு சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி அம்மக்களின் நலனில் தனக்குள்ள கரிசனையை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை- மானிய கோரிக்கையின் பொழுது சிறுபான்மையினர் இயக்குனரகம் ஒன்றினை ஏற்படுத்தி விரைந்த செயல்பாடுகளுக்கு வழிவகை செய்தார். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார்.
சாதனைகள் நிறைந்த வரலாற்று பயணத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு சட்டப்படியான அதிகாரம் வழங்கி இன்று செய்துள்ள அறிவிப்பு இன்னும் ஒரு மைல்கல். சிறுபான்மை மக்களின் குறைகளை, தேவைகளை உடனுக்குடன் தக்கமுறையில் நிவர்த்தி செய்திட இது வழிவகுக்கும்.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை ஏற்படுத்தி வரலாற்றில் இடம் பெற்றுள்ள கருணாநிதியே இந்த அறிவிப்பும் செய்தது பெருமைப்பட வேண்டிய ஒன்று. முதல்வரின் நீண்ட சாதனைப் பட்டியலில் இதுவும் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது" என்று வின்சென்ட் சின்னதுரை கூறியுள்ளார்.