இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் அணுசக்தி உடன்பாட்டை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்றக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து வைகோ பேசியதாவது:
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடானது இந்தியாவின் இறையாண்மைக்குச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகளின்படி இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், அமெரிக்கா வழங்கிய அணு உலைகள் அனைத்தையும் திரும்பக் கேட்கும்.
மேலும், இந்தியாவின் அணுத் திட்டங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். எனவே இந்த உடன்பாட்டை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைமுறைப்படுத்தக் கூடாது.
இவ்வாறு வைகோ பேசினார்.