விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் பேருந்துகள் இயங்கியது. கடைகள் திறந்தே இருந்தன.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், கோட்டார், கன்னியாகுமரி, களியக்காவிளை, பத்மநாபபுரம், குளச்சல், குலசேகரம், உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டம் முழுவதும் 30க்கு மேற்பட்ட பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் ஒருசில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நாகர்கோவில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ. மாநில துணை தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 75 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை, நீலகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கியது. மேட்டுப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளாவுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரியில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காலையில் தனியார் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர் சகநிலை திரும்பியது.
கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.