இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 28 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் கடலோரக் காவல்படையினர் அதிகாரி ராஜன் தலைமையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 3 விசைப் படகுகளில் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 15 பேரை சுற்றிவளைத்து சென்னைக்குக் கொண்டுவந்தனர்.
இதில் கிறிஸ்டோபர் என்ற மீனவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களை காசிமேடு மீன்பிடித் துறைமுகக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்துக் காவல்துறையினர் கூறுகையில், மீனவர்கள் அனைவரும் இலங்கை நீர்க்கொழும்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்றனர்.
மீனவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பிறகு ஆட்சியர் தலைமையிலான கூட்டு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும். கூட்டு நடவடிக்கைக் குழுதான் இறுதி முடிவை எடுக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.