சட்டப்பேரவையில் இன்று 'நர்கீஸ்' புயல் குறித்து ருசிகர விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் இன்று அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சேகர்பாபு எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், வங்கக் கடலில் உருவான புயலுக்கு 'நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது. பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது.
கலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா? புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது? இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது துணை அவைத் தலைவர் வி.பி.துரைசாமி குறுக்கிட்டு, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், புயலுக்கு 'நர்கீஸ்' பெயரை வானிலை நிபுணர்கள் தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு 'நர்கீஸ்' என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.
இந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.