முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்க கோரி மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறேன். எனது தண்டனை காலம் 14 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு சிறைத்துறை ஆலோசனை வாரியத்திடம் என்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தேன். இந்த மனுவை பரிசீலித்த ஆலோசனை வாரியம் விடுதலை செய்ய முடியாது என கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.
மேலும், என்னை விடுதலை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்தது. எனது நன்னடத்தையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
என்னை விடுதலை செய்யக்கூடாது என்று சிறைத்துறை ஆலோசனை வாரியம் பரிந்துரைத்த ஆலோசனைகளை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதில் அளிக்க கோரி மத்திய அரசுக்கும், வேலூர் பெண்கள் சிறப்பு சிறைச்சாலை ஆலோசனை வாரியத்துக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஜோதிமணி தள்ளி வைத்தார்.