''ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பதுக்கலை தடுக்கக் கோரியும் மே 15ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறினார்.
சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விலைவாசி உயர்வுக்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. 15 அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலை கடைகளில் வழங்கக் கோரியும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பதுக்கலை தடுக்கக் கோரியும் வரும் 15ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கைவிடப்பட வேண்டும்.
ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க அந்த நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 500 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலச் சட்டங்களை அந்த நிறுவனம் மீறுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தப்புரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவற்றை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மே 7ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அந்தச் சுவற்றை பார்வையிடுகிறார். தீண்டாமை சுவற்றை இடிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அதை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.
டி.ஆர். பாலு பிரச்சனை குறித்து கேட்டதற்கு, இது தொடர்பான முழு விவரம் தெரியவில்லை என்றும், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் வரதராஜன்.