போதை பொருள் கடத்திய வழக்கில் ராமநாதபுரம் வாலிபர்கள் இரண்டு பேருக்கு சீன அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவர்களை காப்பாற்ற தென் மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுல்தான் என்பவரது மகன் சலீம்கான் (28). இவர் 1998ஆம் ஆண்டு பாங்காக்குக்கு வேலைக்கு சென்றார். பின்னர் 2004ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் யாருக்கும் தெரியாமல் அயல்நாடு சென்று விட்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை சேர்ந்த சையது என்பவர் சலீம்கானின் தந்தையை சந்தித்து, உங்கள் மகன் சலீம்கானும், எனது சகோதரர் அஸ்தரும் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் சீனா அரசு தூக்கு தண்டனை விதித்து உள்ளது. இருவரையும் உடனே காப்பாற்ற ரூ.30,000 கேட்டுள்ளார். இதை நம்பாத சுல்தான், தனது உறவினரிடம் விசாரித்ததில் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சுல்தானை சந்தித்துள்ள சையது மற்றும் அவரது உறவினர்கள், அஸ்தர் தூக்கு தண்டனை பெற்றதற்கு உங்கள் மகன்தான் காரணம். இதனால் ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி சுல்தானை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து தென் மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் சஞ்சீவ்குமாருக்கு கடந்த வாரம் பேக்ஸ் மூலம் ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார் சுல்தான். அதில், சீனா நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ள 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனை காரணம் காட்டி சையது, அவரது உறவினர்கள் சிலர் என்னிடம் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.