''மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் நலிந்த நிலையில் உள்ள 46 தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்படும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.இ.அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள மாவட்டத்திற்கு ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா ரூ.25,000 வீதம், குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொருவர் வீதம், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 46 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா ரூ.25,000 வீதம், மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.