சென்னையிலிருந்து 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகை, ஓங்கோல் இடையே இது கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தின் வடபகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல், ஆந்திரா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக ஒரிசா மாநிலத்திலும் மழை பெய்யக்கூடும். அதோடு பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.