தாராபுரம் அருகே வேனும், கன்டெய்னர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் டைட்டாஸ் என்ற கடப்பசாமி (47). பாதிரியாராக இருந்த இவர் தலைமையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவ திருச்சபையினர் சுற்றுலா செல்வதும் வழக்கம்.
இதேபோல் இந்த ஆண்டும் இவர் தலைமையில் திருச்சபையினர் சுற்றுலா சென்றனர். 70 பேர் ஒரு பேருந்திலும், 10 பேர் ஒரு வேனில் சென்றனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு வேன், ஈரோடு மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பனியன் ஏற்றிக் கொண்டு வந்த கன்டெய்னர் லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் கடப்பசாமி, டேவிட்ராஜ், சுவிட்டி, மதுரையை சேர்ந்த சிமியோன், வேன் ஓட்டுனர் பாலு உட்பட ஐந்து பேர் நிகழ்விடத்திலேய இறந்தனர்.
வேனில் பயணம் செய்த ஜோனத்தன், பிரபாகரன், ஆதி, கிருஸ்டி, ஜோயஸ் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.