10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, நம் விண்வெளித் துறையின் மகத்தான உலக சாதனை என்று முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் தளத்தில் இருந்து ஏவிய பி.எஸ்.எல்.வி.- சி.9 ராக்கெட் நேற்று காலை விண்வெளியை நோக்கி வெற்றியுடன் சீறிப் பாய்ந்து இந்திய விண்வெளித்துறையில் ஒரு மகத்தான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்குமுன் 8 செயற்கைக்கோள்களை ஒரே விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை படைத்தது ரஷ்ய நாடு. அதிக செயற்கைக்கோள்களை ஒரே விண்கலத்தில் அனுப்பியதில் அதுவே இதுவரை உலக சாதனையாக மதிக்கப்படுகிறது. அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் 10 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது நமது இந்தியத் திருநாட்டின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்.
உலகின் விண்வெளித்துறையில் இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளதன் மூலம் இந்தியத் திருநாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தியுள்ள மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், விண்வெளியியல் துறை மேதைகளாகிய இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர், மகத்தான இந்தத் திட்டத்தின் தலைவர் ஜார்ஜ் கோஷி ஆகியோருக்கும் இந்த விண்வெளிக் கலத்தை இயக்குவதில் பங்குபணியாற்றுவதில் அப்பெருமக்களுக்கு துணைநின்ற விண்வெளித்துறை அறிஞர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில், தமிழ் மக்களின் சார்பில் என் இதயம் கனிந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்க அறிவியல்! மேன்மேலும் வெற்றிகள் குவிப்பதாகுக நம் விஞ்ஞானிகளின் ஆற்றல்! என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.