''ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுமானால் அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்'' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் கோ.க.மணி பாலாற்று குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சி குறித்து பிரச்சனை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் சொன்னது. இதையடுத்து இரு மாநில அதிகாரிகளும், மத்திய அரசு அதிகாரிகளும் கூடி பேசினார்கள்.
அதில் பாலாற்றின் குறுக்கே அணை ஏன் வேண்டும் என்று ஆந்திர அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அணையால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று நாம் அறிக்கை தர வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அணை கட்ட முயற்சி நடப்பதாக செய்தி வந்துள்ளது. நமது உரிமைகளைப் பெற எல்லா வகையிலும் அரசு செயல்பட்டு வருகிறது. செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுமானால் அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம் என்று துரைமுருகன் கூறினார்.