திருச்சி அருகே காவல்துறையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டான்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் 'பாம்' பாலாஜி மீது உள்ளது.
இந்தநிலையில் திருவெறும்பூர் காவல்துறை ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் சர்கார்பாளையம் என்ற இடத்தில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 'பாம்' பாலாஜி வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றான். அவனை காவல்துறையினர் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது பாலாஜி தான் வைத்திருந்த வெடிகுண்டு காவலர்கள் மீது வீசினான். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டான். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் உதயகுமார் இடது கையில் குண்டு காயம் ஏற்பட்டது. மேலும் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் உதயகுமார், ரவுடி பாலாஜியை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி நிகழ்விடத்திலேயே பலியானான். அவனது உடலை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவனிடம் இருந்த வெடிகுண்டு, துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த மூன்று காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.