''வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்'' என்று தமிழக காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வயலார் ரவி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வயலார் ரவி முதன் முறையாக இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதை அடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்திற்கு நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்கள், மாவட்ட தலைவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. நல்லுறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க தலைவர்கள், நிர்வாகிகளுடன் சேர்ந்து பாடுபடுவோம் என்று வயலார் ரவி கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாற்றப்பட மாட்டார் என்று வயலார் ரவி தெரிவித்தார்.