''விவசாயிகள் மேலும், மேலும் உயர வேண்டும். அதற்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள், 2 தொழில் நுட்ப பூங்காக்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா, காமராஜர், சிதம்பரனார் போன்றோரால் சிந்திக்கப்பட்டது தான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் கடந்தாண்டே முடிந்து இருக்கும். அதை தடுத்தவர்கள் யார்? என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விரிவாக்க பணியையும் தடுக்க சிலர் வருவார்கள்.
ஏழைகளை காட்டி தடுப்பவர்கள் தான் அவர்கள். ஏழைகள், விவசாயிகள் வாழக்கூடாது என்று சொல்பவர்கள் நாங்கள் அல்ல. அவர்கள் மேலும், மேலும் உயர வேண்டும். அதற்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கிற இயக்கம் தி.மு.க., மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணி அரசு தான். ஏழைகள், வறியவர்கள், விவசாயிகளுக்காக பாடுபட்டு கொண்டு இருக்கிற இயக்கம் தி.மு.க.
ஏழைகள் ஏமாளிகளாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. அவர்கள் ஏற்றம் பெற, வாழ வழி வகுப்போம். அகில உலக பந்தயத்தில் வெற்றி பெறுகிற நாடாக இந்தியா மாற வேண்டும். வலுவான, வளமையான இந்தியா உருவாக அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.